🐾👟👟👟👠👟👟🐾
By the River Piedra I sat down & wept
- Paulo Coelho
'அவள்' என்ற ஒற்றைச் சொல் ஒரு ஆணின் மனதில் எத்தனை வித எண்ணங்களை எழுப்புமோ, அவன் பள்ளிப் பருவத்திலிருந்து இன்று இருக்கும் வரை ஒரு சிறு குறும்படமாகவே அவன் வாழ்க்கையை மனதிற்குள் ஓட்டிப்பார்க்க வைக்கும் சொல்.
'அவன்' என்ற சொல் ஒரு பெண்ணின் மனதில் எத்தனை விதமான அலைகளை மனதிற்குள் மோதச் செய்யுமோ தெரியாது.
பெண்ணின் எண்ண அதிர்வுகளை கண்டுபிடிக்க எத்தனித்து தோற்றுப் போனவர்கள் எத்தனையோ பேர். பெண்களின் மனதில் ஆயிரம் எண்ணங்கள் ஓடும் என்று சொல்வார்கள். ஒரே நேரத்தில் இரண்டுக்கும் மேற்பட்டவற்றை பற்றி யோசிக்கும் பொழுதே பல ஆண்கள் விரக்த்தியின் எல்லைக்கே தங்களை கொண்டு போய் நிறுத்திக் கொண்டு உளற ஆரம்பித்து விடுகிறார்கள். ஆனால் எத்தனை இன்பமானாலும், கஷ்டமானாலும் எளிதில் உடைந்து போகக் கூடியவர்கள் என்ற பல்லவியை சொல்லியே கட்டுக்கதைகளை நிரப்பியவர்களின் முன் பெண்கள் தைரியமாக வலம் வருவதை காணலாம். ஆண்களுக்கு புரியாத இயற்கையின் புதிர் இலை பெண்.
நாம் வாழ்க்கையில் எந்த ஒரு பெண்ணோடு கை கோர்த்து கடற்கரையில் நடக்கும் பொழுது, வேடிக்கை பார்க்கும் சூரியனும் நிலாவும் எத்தனை சுற்றுகள் நம்மை சுற்றி வந்தார்கள் என்ற கணக்கெடுப்புகளை கண்டு கொள்ளாமல் நடந்து போகிறோமே அப்படியான ஒரு பெண்ணின் மனநிலையினை இப்புத்தகம் அருகிலிருந்து பார்க்கிறது.
இந்த உலகம் சுதந்திரத்தால் கட்டுப்பாடாய் இயங்குகிறதா இல்லை கட்டுப்பாடுகளால் சுதந்திரமாய் இயங்குகிறதா என்பதை ஒரு பெண்ணின் மனப் போராட்டாத்தோடு ஒப்பிட்டு அலசுகிறது இப்புத்தகம்.
காதல் கதைகளை இதுவரை ஆண்களின் பார்வையில் பலவாறு படித்திருக்கிறேன், பார்த்திருக்கிறேன் ஆனால் முதல் முறை ஒரு பெண்ணின் பார்வையில் அவள் தனக்குள் ஒளித்து வைத்திருக்கும் காதலை எப்படி அணுகுகிறாள் என்பதை துல்லியமாக படம் பிடித்திருக்கிறது. இக்கதை.
தன் சிறு வயது காதலனை சந்திக்கக் கிளம்பும் ஒரு பெண்ணின் பயணமாக தொடங்கும் இப்புத்தகம், அவனைப் பற்றி அவள் கொண்டுள்ள பிம்பங்களை ஒவ்வொரு நொடியும் தனக்குள்ளேயே கேள்விகளால் கேட்டுத் துளைத்துக் கொள்கிறாள்.
ஆண்களின் ஒரே ஒரு செயலுக்கு பெண்களின் மனதில் இத்தனை வித பிரதிபலிப்புகள் தோன்றுகின்றனவா என்று ஆச்சர்யப்பட வைக்கிறது. இதை ஒரு கதாபாத்திரத்தின் அமைப்பு மட்டுமே என்று கடந்து செல்ல இயலவில்லை. ஆசிரியர் ஆரம்பத்திலேயே இவை கற்பனைக் காதாபாத்திரங்கள் என்று சொல்லியிருந்தாலும், ஒரு பெண் தனக்குள் இரண்டாகப் பிரிந்து தனக்குள் எழும் சிந்தனைகளைப் பற்றி வழக்காடும் தருணங்கள், கதிரியக்க மருத்துவ கருவிகள் ஏதுமில்லாமலே அவள் மனதை படம் பிடித்தது போல் உள்ளது.
இந்த காதல் கதைள்குள் இறை நம்பிக்கையின் இரு துருவங்களையும் அலசுகிறார் ஆசிரியர். கடவுள் எனும் பெரிய சிந்தனை பரப்பில் பெண்களுக்கான இடம் எவ்வாறு உள்ளது என்பதை காதலர்களுக்கு உள்ளான ஒரு நடைபாதை விவாதமாக கொண்டு செல்கிறார் ஆசிரியர்.
ஒரு படத்தில் விவேக்கைப் பார்த்து தனுஷ் "சார் நீங்க உள்ளுக்குள்ள பேசறதா நினைச்சு சத்தமா பேசிட்டீங்க" என்று சொல்வார். அதே போல் தான் இக்கதையில் வரும் பெண்ணின் கதாபாத்திரம் தன் மனதின் உரையாடல்கள் மூலம் நமக்கு மிக அருகிலேயே காட்சி தருகிறாள். ஒரு சில தருணங்களில் மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது. ஒரு பெண் தனக்குள் அனுபவிக்கும் ஊசலை நாம் புரிந்து கொள்ளும் ஒரு கருவியாகவும் பயன்படுகிறது.
புத்தகத்தின் தலைப்பை போலவே நதிக்கரையில் அமர்ந்து கொண்டு சிறு சிணுங்களுடன் துள்ளியோடும் நீரின் ஓட்டதை கவனிப்பதை போல மிகத் துல்லியமாக ஒரு பெண்ணின் மனதை அறிந்து கொள்ள இப்புத்தகத்தை வாசிக்கலாம்.
🐦⬛ கடையாணியார் சீ.நே.பி
பூக்கட்டும் உலகம்
[21-மார்ச்சு-25 / புக்கிட் பஞ்சாங் நூலகம்]
🐾👟👟👟👠👟👟👟🐾






Comments
Post a Comment
Thanks for your comments. Your comment will be posted here after the moderation by the admin.