ஏடேறும் எழுத்து - இளையராஜா
தொடரும் பின்தொடர்தல் -(2)
ஒரு சில முக்கிய வரலாற்று காரியங்களை இயற்கை தனி மனிதனை வைத்து நிகழ்த்திக் கொள்கிறது. அப்படியே பலர் இவ்வரலாற்றில் இடம் பெற்றுள்ளார்கள்.
ஆம் இசைஞானி சொல்வது உண்மைதான். ஏழாம் வகுப்போ எட்டாம் வகுப்போ படித்துக் கொண்டிருக்கும் பொழுது என் பெரிய அண்ணன் நேரு ராஜாவின் ரமணமாலை கேசட்டை வாங்கி வந்தார். அப்பொழுது அவர் சேலத்தில் படித்து முடித்துவிட்டு ஓசூரில் வேலை செய்து கொண்டிருந்தார். எங்கள் வீட்டில் டெல்லி செட் என்று அப்பொழுது மிகவும் பிரபலமான உள்ளூர் தயாரிப்பு டேப்ரிக்கார்டர் இருந்தது.
சித்தர் பாடல்கள் பற்றியெல்லாம் அப்பொழுது எனக்கு தெரியாது. இப்பொழுது அங்கிங்கு கேட்டு தெரிந்து கொண்டதில் சித்தர்கள் பாடல்கள் எப்பொழுதும் அன்றாட மனிதனின் அலைச்சலையும் ஆசைகளையும் தொடர்ந்து சம்மட்டி கொண்டு அரைந்து தனி மனிதனுடன் மனதளவில் போராடிக் கொண்டேயிருக்கும். ஆனால் அப்பொழுது கேசட்டை போட்டு முதல் பாடலை கேட்கும் பொழுது "சுற்றுகிற உலகத்திலே பல விதத்தில் சுற்றுகிற மனிதர்களே, வெற்றுக் கைகள் உடன் பிறந்து பல விதத்தில் பற்றுக்களை பிடித்தவரே" என்று தொடங்கும். இது முதலில் கேட்கும் பொழுது ஏதோ ஜனரஞ்சகமான பாடல் போலவே தெரியும், ஆனால் தொடர்ந்து பலமுறை திரும்ப திரும்ப கேட்கும் பொழுது சில கேள்விக் குமிழிகளை நமக்குள் தோற்றுவிக்கும்.
அதற்கு முன்பு திருவண்ணாமலை என்று மட்டுமே அறிந்திருந்தேன். என் அப்பா நான் நான்காவது படிக்கும் பொழுது கார்த்திகை தீபத்திற்கு பந்தோபஸ் போய்விட்டு ஒரு மமஞ்சள் பை நிறைய விளையாட்டு சாமான்களை எனக்கு வாங்கி வந்தார். ஒரு பை நிறைய வெறும் விளையாட்டுப் பொருட்கள் என்பது பெரும் குவியல் போல. அதனாலேயே திருவண்ணாமலை எனக்கு தெரியும். அதுவும் இல்லாமல் நாங்கள் இருந்த அரூரில் இருந்து பார்த்தால் மலைமேல் எரியும் தீபம் தெரியும். ஆனால் அது தீர்த்தமலை தீபம். அதற்கு பின்பு திருவண்ணாமலையில் இருக்கும் சாமியின் பெயர் அருணாச்சலம் என்பதே இசைஞானியின் கேசட்டால் தான் தெரியும்.
இசைஞானியின் மூலமாக பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் பெயரும், கேசட்டில் இருந்த அவரது படமும் தெரியும்.
தீட்சண்யமான அந்த கண்களின் பார்வையிலிருந்து இன்று வரை என் மனதை விலக்கிக் கொள்ள முடியவில்லை. அந்த கண்கள் எப்பொழுதும் என்னுடன் பேசிக் கொண்டேயிருக்கிறது.
கடையாணியார் சீ.நே.பி...

No comments:
Post a Comment
Thanks for your comments. Your comment will be posted here after the moderation by the admin.