மினுக்... மினுக்.. நினைவின் ஒளிகள்
எங்கள் குடும்பத்துடன் நான் சிறுவனாக இருக்கும் பொழுது திருப்பதியிலிருந்து சென்னைக்கு ரயிலில் வருவதற்கு எவ்வளவோ அடம் பிடித்தேன். அதற்காக என் அப்பா கூட வந்த சொந்தக்காரர்களிடம் சண்டை போட்டுக் கொண்டு என்னை மேட்டும் தனியாக திருப்பதி ரயில்வே ஸ்டேஷன் வரை கூட்டி வந்து காண்பித்து விட்டு பேருந்த சென்றோம்.
அதற்கு பிறகு நான் முதன் முதலில் ரயிலில் பயணித்தது என் சின்ன அண்ணன் சரவணனனுடன் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு. முன்பதிவு செய்யாமல் அப்படியே டிக்கெட் வாங்கிக் கொண்டு பெங்களூருவிலிருந்த வந்த எக்ஸ்பிரஸில் ஏறினோம் அப்போதெல்லாம் ஒவ்வொரு ரயிலுக்கும் வெவ்வேறு பெயர்கள் இருப்பது எனக்கு தெரியாது. ரயிலில் இடம் இல்லாததால் கதவு படிக்கெட்டில் தான் இருவரும் உட்கார்ந்து பயணித்தோம். கதவின் அருகே எங்களுடைய பெரிய அண்ணனுக்கு எடுத்துச் சென்ற ஐயாரெட்டு அரிசி சிப்பம் இருந்தது.
ரயிலின் முதல் பயணமே படிக்கெட்டு பயணம். வேடிக்கைக்கு கொஞ்சமும் குறைவில்லாத, கண்களுக்கு முடிவில்லாத புதுமைகளை கணந்தோறும் மாற்றிக் காட்டும் பயணம்.
அதன் பிறகு பல முறை சென்னையிலிருந்து ஜோலார்பேட்டை, ஜோலார்பேட்டையிலிருந்து சென்னை என சென்றிருக்கிறேன். ஏதாவது ஒரு ஹாபியை செய்ய வேண்டும் என்பதற்கா நான் பயணித்த அத்தனை பேருந்து மற்றும் ரயில் டிக்கெட்டுகளை ஏறக்குறைய ஐந்தாண்டுகள் சேமித்து வைத்திருந்தேன். ஒவ்வொரு டிக்கெட்டையும் ஒட்டி வைத்து, எந்த ஊரிலிருந்து எந்த ஊருக்குச் சென்றேன். எந்த தேதியில் சென்றேன் என்ற குறிப்பையும் எழுதி வைத்திருந்தேன். அந்த ஒரு கட்டத்தில் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்குச் சென்ற பொழுது நின்று விட்டது.
எலக்ட்ரிக் ரயில்களிலேயே பயணம் செய்துவிட்டு காரைக்குடியில் அழகப்பா கல்லூரியில் பொறியியல் படிக்கச் சேர்ந்த பொழுது அங்கு தான் முதன் முதலில் நான் டீசல் ரயிலிலை பார்த்தேன். அதற்கு முன்பு அரூரிலிருந்து திப்பம்பட்டிக்கு நெல் அறுக்க அம்மாவுடன் வரும் பொழுது சின்ன வயதில் மொரப்பூரில் ரயில்வேகேட்டில் பேருந்து நிற்கும் பொழுது ரயில் பெட்டிகளை எண்ணிதுண்டு. அப்பொழுது மூன்றாவதோ நான்காவதோ படித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது அது என்ன வகை ரயில் என்பதெல்லாம் தெரியாது.
காரைக்குடியில் மீட்டர் கேஜ் டீசல் ரயிலை பார்க்கும் போதெல்லாம் ஏதோ வேறொரு காலக்கட்டத்தில் பயணிப்பதாகவே தோன்றும். அதுவும் ஆள் அரவமில்லா கோட்டையூர் ரயில் நிலையத்தில் இரவில் என்ஜீனில் இருக்கும் ஓட்டுநர் வளையமான ஒன்றை வீசிவிட்டு நிலையத்திலிருப்பவர் தோதாக கையில் மாட்டும்படி பிடித்திருக்கும் இன்னொரு வளையத்தை கைககளை நீட்டிப் பெற்றுக் கொள்வது புது அனுபவமாகவே இருந்தது.
சிங்கப்பூர் வந்து ஏறக்குறைய இன்றிலிருந்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு நானும் என் நண்பரும் ஜோகூர்பாருவிலிருந்து கோலாலம்பூருக்கு ரயிலில் சென்றோம். அப்பொழுது அதுவும் பாதி தொலைவு வரை டீசல் என்ஜீன் ரயிலாக இருக்கும். அதற்கு பிறகு எலக்ட்ரிக் ரயிலாக மாறிவிடும். ரயில் ஈச்சம் தோட்டங்களுக்கு இடையே செல்லும். அப்பொழுது ரயில் குளிர்சாதனம் பொருந்தியதாக இல்லை. அதனால் மரங்களின் மணமும், மண்ணின் மணமும் கலந்து மனதிற்குள் அதன் நினைவுகளை எழுதிக் கொண்டே வரும்.












.jpeg)














