இறைவி
சின்ன சின்ன ஆனந்தங்களாய் இந்த வயதில் மீண்டும் விழிக்கடையில் வழிந்தொழுகச் சில நாட்கள் கல்லூரி நட்பின் காற்று மெல்லியதாய் வீச மனம் லேசாகிப் பறந்து கொண்டிருந்தது.
இத்தனை அழகியலால் இதை எழுத வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட ஆசையில்லை. அத்தனைக்கும் பொறுப்பு வந்து விழும் சொற்களே.
காகிதப் பூவினை நட்பின் அடையாளமாக அறிவித்து யாரும் வாசிக்காத சாசனத்தை உலகெங்கும் பதாகை அடித்துப் பரப்பியாகி விட்டது.
இசைஞானியின் புத்தகத்தை முடிப்பதற்கு நேரம் கிடைக்கவில்லை. புகைப்படங்களுக்கு எழுதுவது, தோழிகளின் நினைவுகளைப் பேசச் சொல்லி அதைக் கேட்டுக் கதையாக எழுதுவது, இதில் அவர்கள் நினைத்ததை அவர்களின் அனுபவத்தை அவர்களின் நிலை நின்று எழுத வேண்டும். இது ஒரு புதிய அனுபவமும், எழுதுகிறேன் என்பதனால் ஒரு மகிழ்ச்சியான சவாலும் கூட. என்னால் முடிந்தவரை நிலை மாறி, நினைவுகளை மாற்றி, பால் மாறி, அனுபவங்களை எழுதியது ஒரு புது அனுபவமே.
எப்பொழுதும் ஆண் விகுதிகளிலேயே சொற்றொடர்களை முடித்து எழுதி பழகிய எனக்குச் சொல்ல வருவதை முடிக்குமிடத்தில் பெண்பால் விகுதி இட்டு முடிப்பதைக் கவனித்துச் செய்ய வேண்டியிருந்தது.
அதைவிடக் காதால் கேட்ட கதைக்கு நானாகத் தோற்றப்பிம்பத்தை என் கற்பனையில் தோற்றுவித்து அந்தக் காட்சியை மீண்டும் சொற்களாக எழுதியதும் தனி அனுபவமே.
பல இடங்களில் அவர்களின் கல்லூரி அனுபவத்தை எழுதும் பொழுது நான் பெரிதும் உணர்ந்த சில விஷயங்கள் இருந்தன.
ஆண் என்பதாலேயே இந்தச் சமூகம் எனக்களித்திருக்கும் சுதந்திரம் அவர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்தேன். மிகச் சிறிய விஷயம் தனக்குப் பிடித்த பிரியாணியை வாங்கிச் சாப்பிடுவது. பசங்களாகிய எங்களுக்குப் பிரியாணி சாப்பிட வேண்டுமென்றால் யாரும் எந்தக் கணத்திலும் தடுக்க முடியாது. மதியம் சாப்பிடலாம், இரவு பன்னிரெண்டு மணிக்குச் சாப்பிடலாம், காலை மூன்று மணிக்குக்கூட சாப்பிடலாம்.
தோழிகளின் நிலை அவ்வாறாக அன்று இல்லை. பாய் கடை பிரியாணியைக் காரைக்குடி வரை சைக்கிளில் சென்று வாங்கி வருவது ஒரு போராட்டமெனில் வழியில் நின்று வழிமறித்துப் பிரியாணியைக் கொள்ளையடிக்கும் கும்பலிடமிருந்து தப்பித்து வருவது அதைவிடப் பெரிய வேலை.
பசங்க என்பதற்காக விளையாட்டாகச் செய்யும் சில செயல்களும் அவர்களுக்கு எவ்விதச் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அவர்கள் சிரித்துக் கொண்டே சொன்ன கதைகளின் ஊடாக அறிந்துகொள்ள முடிந்தது.
அவர்களின் பார்வையில் பசங்க ஏன் இப்படி இருக்குறானுங்க அப்படிங்குற கேள்விக்கும், பசங்களின் பார்வையில் நான் நடந்துக்குறதுல எந்தத் தப்பும் எனக்குத் தெரியலையே என்ற (Blind spot) அறியாமையின் வெளிப்பாடும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.
இவற்றிற்கு வயது மட்டுமே காரணமா? இல்லை ஆண் என்பதும் காரணமா? இல்லை சமூகம் அதற்குத் தெரியாமலேயே ஆணுக்குத் தந்திருக்கும் சுதந்திரம் காரணமா?
இனிய காந்தி ஜெயந்தி தின வாழ்த்துகள்!
கடையாணியார் சீ.நே.பி

No comments:
Post a Comment
Thanks for your comments. Your comment will be posted here after the moderation by the admin.