சும்மாயிரு

அமைதியாய் இருக்க மனிதன் ஏன் அஞ்சுகிறான். சும்மா ஒரு இடத்தில் உட்கார்ந்திருக்க ஏன் அவ்வளவு சிரமப்படுகிறான். 

சின்ன சின்ன குருவிகளின் கீச்சொலிகளும் அந்த அமைதியான தருணத்தில் அவனது மனசாட்சியோடு நேரடியாக பேசுகிறது. அவன் மனதை கொத்தித் திண்கிறது. 

எல்லோருக்கும் அமைதியாய் ஆலமரத்தின் கீழ் உட்கார்ந்து புத்தரைபோல் உலகின் இயக்கத்தை வேடிக்கைப் பார்க்க ஆசைதான் ஆனால் எவருக்கும் சும்மா இருப்பதற்கான துணிச்சல் இல்லை. சிறு வயதில் விளையாடும் பொழுது அம்மா வீட்டில் சொல்வார்கள் கொஞ்சம் வாலை சுருட்டிக் கொண்டு ஒரு இடத்தில் உட்கார சொல்லி. எப்பொழுதும் சிந்தனை எனும் வாலை சுருட்டுவது என்பது எவ்வளவு கஷ்டாமாக இருக்கிறது. சுருட்டிக் கொண்டு சும்மா இருப்பது அதை விட அல்லவா கஷ்டமாக இருக்கிறது.

அரவமற்ற அதிகாலையின் நொடி முள்ளின் சத்தம் கூட மனதோடு டிக் டிக் என்ற மொழியில் பேசுகிறது. 

மனிதனுக்கு காக்கையோ கத்தினாலோ கோழியோ கூவினாலோ பொழுது விடிந்து விட்டது என்கிறான். குருவிகளுக்கும் காகங்களுக்கும் டயர் சத்தம் கேட்க ஆரம்பித்தவுடன் மனிதன் விழித்துக் கொண்டான் என கண்டு கொள்கின்றன.

உலகம் என்பது பல்வேறு ஜீவராசிகளால் ஆன ஒரு மாபெரும் கடிகாரத்தின் பின்புறம் கழற்றிய காட்சியா. எத்தனை நுணுக்கமான வடிவமைப்புகள். எது எதனோடு சேர்ந்து சுற்றுகிறது. எந்த பல்சக்கரத்தின் வேகத்தை எந்த பல் சக்கரம் நிர்ணயிக்கிறது. இந்த ஜீவராசிகள் எல்லா சேர்ந்து சுழல்வதால் அறியப்படும் முன்பக்க டயலில் உள்ள காலத்தை பார்த்துக் கொண்டிருப்பது யாரோ. 

இயங்காத இரு புள்ளிகள் நிலையானது எனும் மனிதன். ஒரே வேகத்தில் இயங்கும் இரு ரயில்களின் ஜன்னல்களும் நிலையானது என்கிறானே எப்படி. எதிர்படும் ரயின் ஜன்னலில் கடந்து போன முகத்தின் பரீட்சயம் சில நொடிகள் கழித்தே நமக்கு விளங்குகிறதே. எல்லாம் கடந்து போன பின் தான் நாம் உணர்ந்து கொள்வோமா. எப்படி. 

தேடல் இல்லாமல், ஆசை இல்லாமல், தாக.ம் இல்லாமல் ஏன் போலித்தனம் கூட இல்லாமல் ஒருவனால் எப்படி சும்மா உட்கார்ந்திருப்பது.

சிறு வயது பள்ளியிலிருந்து இயக்க விதிகளையும், நிலையாற்றல், இயங்கு ஆற்றலின் பண்புகளை மட்டுமே சொல்லி கொடுத்துவிட்டு நாற்பது வயதிற்கு மேல் வந்து அவை எல்லாவற்றையும் மறந்தால் தான் நீ மனிதனாவாய் என்றால் இருநூறு கி.மீ வேகத்தில் இயங்கும் ரயிலை டப்பென நிறுத்தினால் ஆகும் சேதங்கள் அல்லவா ஏற்பபடும்.

அதிகாலையில் சும்மா இருப்பதற்காக எழுந்து விட்டு, சும்மா உட்கார்ந்து கொண்டிருந்தாலும் மனம் ஏதேதோ விஷயங்களை தேடி நூல் அறுந்த பட்டம் போல் சுற்றி வந்து விட்டது. 

உண்மையில் சும்மாயிருப்பது எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது.

கடையாணியார் சீ.நே.பி


 இறைவி

சின்ன சின்ன ஆனந்தங்களாய் இந்த வயதில் மீண்டும் விழிக்கடையில் வழிந்தொழுகச் சில நாட்கள் கல்லூரி நட்பின் காற்று மெல்லியதாய் வீச மனம் லேசாகிப் பறந்து கொண்டிருந்தது.

இத்தனை அழகியலால் இதை எழுத வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட ஆசையில்லை. அத்தனைக்கும் பொறுப்பு வந்து விழும் சொற்களே.

காகிதப் பூவினை நட்பின் அடையாளமாக அறிவித்து யாரும் வாசிக்காத சாசனத்தை உலகெங்கும் பதாகை அடித்துப் பரப்பியாகி விட்டது.

இசைஞானியின் புத்தகத்தை முடிப்பதற்கு நேரம் கிடைக்கவில்லை. புகைப்படங்களுக்கு எழுதுவது, தோழிகளின் நினைவுகளைப் பேசச் சொல்லி அதைக் கேட்டுக் கதையாக எழுதுவது, இதில் அவர்கள் நினைத்ததை அவர்களின் அனுபவத்தை அவர்களின் நிலை நின்று எழுத வேண்டும். இது ஒரு புதிய அனுபவமும், எழுதுகிறேன் என்பதனால் ஒரு மகிழ்ச்சியான சவாலும் கூட. என்னால் முடிந்தவரை நிலை மாறி, நினைவுகளை மாற்றி, பால் மாறி, அனுபவங்களை எழுதியது ஒரு புது அனுபவமே.

எப்பொழுதும் ஆண் விகுதிகளிலேயே சொற்றொடர்களை முடித்து எழுதி பழகிய எனக்குச் சொல்ல வருவதை முடிக்குமிடத்தில் பெண்பால் விகுதி இட்டு முடிப்பதைக் கவனித்துச் செய்ய வேண்டியிருந்தது.

அதைவிடக் காதால் கேட்ட கதைக்கு நானாகத் தோற்றப்பிம்பத்தை என் கற்பனையில் தோற்றுவித்து அந்தக் காட்சியை மீண்டும் சொற்களாக எழுதியதும் தனி அனுபவமே.

பல இடங்களில் அவர்களின் கல்லூரி அனுபவத்தை எழுதும் பொழுது நான் பெரிதும் உணர்ந்த சில விஷயங்கள் இருந்தன.

ஆண் என்பதாலேயே இந்தச் சமூகம் எனக்களித்திருக்கும் சுதந்திரம் அவர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்தேன். மிகச் சிறிய விஷயம் தனக்குப் பிடித்த பிரியாணியை வாங்கிச் சாப்பிடுவது. பசங்களாகிய எங்களுக்குப் பிரியாணி சாப்பிட வேண்டுமென்றால் யாரும் எந்தக் கணத்திலும் தடுக்க முடியாது. மதியம் சாப்பிடலாம், இரவு பன்னிரெண்டு மணிக்குச் சாப்பிடலாம், காலை மூன்று மணிக்குக்கூட சாப்பிடலாம்.

தோழிகளின் நிலை அவ்வாறாக அன்று இல்லை. பாய் கடை பிரியாணியைக் காரைக்குடி வரை சைக்கிளில் சென்று வாங்கி வருவது ஒரு போராட்டமெனில் வழியில் நின்று வழிமறித்துப் பிரியாணியைக் கொள்ளையடிக்கும் கும்பலிடமிருந்து தப்பித்து வருவது அதைவிடப் பெரிய வேலை.

பசங்க என்பதற்காக விளையாட்டாகச் செய்யும் சில செயல்களும் அவர்களுக்கு எவ்விதச் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அவர்கள் சிரித்துக் கொண்டே சொன்ன கதைகளின் ஊடாக அறிந்துகொள்ள முடிந்தது.

அவர்களின் பார்வையில் பசங்க ஏன் இப்படி இருக்குறானுங்க அப்படிங்குற கேள்விக்கும், பசங்களின் பார்வையில் நான் நடந்துக்குறதுல எந்தத் தப்பும் எனக்குத் தெரியலையே என்ற (Blind spot) அறியாமையின் வெளிப்பாடும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

இவற்றிற்கு வயது மட்டுமே காரணமா? இல்லை ஆண் என்பதும் காரணமா? இல்லை சமூகம் அதற்குத் தெரியாமலேயே ஆணுக்குத் தந்திருக்கும் சுதந்திரம் காரணமா?

இனிய காந்தி ஜெயந்தி தின வாழ்த்துகள்!

கடையாணியார் சீ.நே.பி


 ஏனோ...


 ஊடல்கள் இல்லாத

காதலும்

கூடல்கள் இல்லாத

நட்பும்

ஈரப்பதம் இல்லாத கண்ணீர் துளிகளே!

கடையாணியார் சீ.நே.பி


 ⛵⛵⛵🗿⛵⛵⛵

உல்கு

பலங்காலத் தமிழர் வாணிகம் - மயிலை சீனி. வேங்கடசாமி

இப்புத்தம் கதை புத்தகம் அல்ல. அலைந்து திரிந்த தேசாந்திரியின் கதையும் அல்ல. வரலாற்றின் குறிப்புகளை சங்க கால இலக்கியங்களில் ஆராய்ந்து அவற்றின் ஊடாக மக்களின் வாழ்க்கையை பற்றி அறிய விழையும் நூல்.

இத்தனை நாள் கதைகளுக்கும், கட்டுரைகளுக்கும் என் கனவுலகில் சஞ்சரித்து என் மனம் அசைபோட்டதையும், கதையோடு நான் கடலாடியதையும் எழுதினேன். ஆனால் இம்முறை ஒரு வரலாற்றுக் குறிப்பை பற்றி எதை எழுதுவது எதை விடுவது என்று தெரியாமல் விழிக்கும் நிலையில் இப்புத்தகம் என்னை தள்ளிவிட்டது. 

இப்புத்தகத்தை இரவல் பெற்றதற்கும் வாசிக்கத் தொடங்குவதற்கும் முதற்காரணம் ஜான்ஜீ எனக்கு பரிசளித்த "The Silk Roads" எனும் நூலினை படிக்க ஆரம்பிக்கும் முன் இது ஒரு அடித்தளமாகவும், பண்டைய காலத்தின் போக்குவரத்துகளையும், வியாபார பரிமாற்றங்களையும் புரிந்து கொள்ளவும் தயார்படுத்தும் என்பதற்காக எடுத்து வந்தேன்.

 (Reference Book) என்று. இந்த ஒரு புத்தகத்தை வைத்து நாம் ஆயிரத்தெட்டு கதைகளை வார்த்தெடுக்கலாம் போல். 

சொற்களைப் பற்றிய குறிப்கள், பொருட்களைப் பற்றிய குறிப்புகள், மக்களின் இயங்கு முறைமைகளைப் பற்றிய குறிப்புகள், அகழாய்வுகளைப் பற்றிய குறிப்புகள், அரசர்களைப் பற்றிய குறிப்புகள், இடத்தின் பெயர்களைப் பற்றிய குறிப்புகள், நாட்டின் எல்லையைப் பற்றிய குறிப்புகள், கடல்களின் பெயர்களைப் ற்றிய குறிப்புகள் என ஏராளம்.

ஒவ்வொரு மனிதனின் தேடலும் எத்தனைக்கு எத்தனை ஆழமாக, வேட்கையாக இருக்குமோ அத்தனை தூரம் அவர்களின் இலக்கை அடைவதும் சாத்தியமாகிறது. தமிழ் புத்தகங்களை தேடி அலைந்த உ.வே.சா அவர்களை போல இவர் வரலாற்று பின்னனிகளை தேடி ஆராய்வதில் இத்தனை செயல்பட்டது வியப்பளிக்கிறது. எப்பொழுதும் யாரோ ஒரு தனி மனிதனின் தேடலால் தான் ஒரு பெரும் சமூகம் தன்னிறைவை பெறுகிறது என்பது இவர்கள் இருவரின் தேடல்களும், அந்த தேடல்களில் கிடைத்த பொக்கிஷங்களும் நிரூபிக்கிறது.

இப்புத்தகம் வரலாற்றில் நிகழ்ந்த நூலிலைகளால் தமிழரின் பண்டைய சிறப்பினை இழுக்கும் வடக்கயிறாக இருக்கிறது. இதில் நான் காண விரும்பும் ஒரு பிரிவில் தனி சரடையாவது பிரித்து இதிலிருந்து புதிதாகக் கற்றுக் கொண்ட செய்திகளை திரட்ட வேண்டும். கண்டிப்பாக அதற்கு ஒரு முழுமையான நாளை ஒதுக்க வேண்டும். 


சிறிய இடைவெளிக்குப் பிறகு தொடரும்.

கடையாணியார் சீ.நே.பி