மினுக்... மினுக்.. நினைவின் ஒளிகள்
எங்கள் குடும்பத்துடன் நான் சிறுவனாக இருக்கும் பொழுது திருப்பதியிலிருந்து சென்னைக்கு ரயிலில் வருவதற்கு எவ்வளவோ அடம் பிடித்தேன். அதற்காக என் அப்பா கூட வந்த சொந்தக்காரர்களிடம் சண்டை போட்டுக் கொண்டு என்னை மேட்டும் தனியாக திருப்பதி ரயில்வே ஸ்டேஷன் வரை கூட்டி வந்து காண்பித்து விட்டு பேருந்த சென்றோம்.
அதற்கு பிறகு நான் முதன் முதலில் ரயிலில் பயணித்தது என் சின்ன அண்ணன் சரவணனனுடன் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு. முன்பதிவு செய்யாமல் அப்படியே டிக்கெட் வாங்கிக் கொண்டு பெங்களூருவிலிருந்த வந்த எக்ஸ்பிரஸில் ஏறினோம் அப்போதெல்லாம் ஒவ்வொரு ரயிலுக்கும் வெவ்வேறு பெயர்கள் இருப்பது எனக்கு தெரியாது. ரயிலில் இடம் இல்லாததால் கதவு படிக்கெட்டில் தான் இருவரும் உட்கார்ந்து பயணித்தோம். கதவின் அருகே எங்களுடைய பெரிய அண்ணனுக்கு எடுத்துச் சென்ற ஐயாரெட்டு அரிசி சிப்பம் இருந்தது.
ரயிலின் முதல் பயணமே படிக்கெட்டு பயணம். வேடிக்கைக்கு கொஞ்சமும் குறைவில்லாத, கண்களுக்கு முடிவில்லாத புதுமைகளை கணந்தோறும் மாற்றிக் காட்டும் பயணம்.
அதன் பிறகு பல முறை சென்னையிலிருந்து ஜோலார்பேட்டை, ஜோலார்பேட்டையிலிருந்து சென்னை என சென்றிருக்கிறேன். ஏதாவது ஒரு ஹாபியை செய்ய வேண்டும் என்பதற்கா நான் பயணித்த அத்தனை பேருந்து மற்றும் ரயில் டிக்கெட்டுகளை ஏறக்குறைய ஐந்தாண்டுகள் சேமித்து வைத்திருந்தேன். ஒவ்வொரு டிக்கெட்டையும் ஒட்டி வைத்து, எந்த ஊரிலிருந்து எந்த ஊருக்குச் சென்றேன். எந்த தேதியில் சென்றேன் என்ற குறிப்பையும் எழுதி வைத்திருந்தேன். அந்த ஒரு கட்டத்தில் பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரிக்குச் சென்ற பொழுது நின்று விட்டது.
எலக்ட்ரிக் ரயில்களிலேயே பயணம் செய்துவிட்டு காரைக்குடியில் அழகப்பா கல்லூரியில் பொறியியல் படிக்கச் சேர்ந்த பொழுது அங்கு தான் முதன் முதலில் நான் டீசல் ரயிலிலை பார்த்தேன். அதற்கு முன்பு அரூரிலிருந்து திப்பம்பட்டிக்கு நெல் அறுக்க அம்மாவுடன் வரும் பொழுது சின்ன வயதில் மொரப்பூரில் ரயில்வேகேட்டில் பேருந்து நிற்கும் பொழுது ரயில் பெட்டிகளை எண்ணிதுண்டு. அப்பொழுது மூன்றாவதோ நான்காவதோ படித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது அது என்ன வகை ரயில் என்பதெல்லாம் தெரியாது.
காரைக்குடியில் மீட்டர் கேஜ் டீசல் ரயிலை பார்க்கும் போதெல்லாம் ஏதோ வேறொரு காலக்கட்டத்தில் பயணிப்பதாகவே தோன்றும். அதுவும் ஆள் அரவமில்லா கோட்டையூர் ரயில் நிலையத்தில் இரவில் என்ஜீனில் இருக்கும் ஓட்டுநர் வளையமான ஒன்றை வீசிவிட்டு நிலையத்திலிருப்பவர் தோதாக கையில் மாட்டும்படி பிடித்திருக்கும் இன்னொரு வளையத்தை கைககளை நீட்டிப் பெற்றுக் கொள்வது புது அனுபவமாகவே இருந்தது.
சிங்கப்பூர் வந்து ஏறக்குறைய இன்றிலிருந்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு நானும் என் நண்பரும் ஜோகூர்பாருவிலிருந்து கோலாலம்பூருக்கு ரயிலில் சென்றோம். அப்பொழுது அதுவும் பாதி தொலைவு வரை டீசல் என்ஜீன் ரயிலாக இருக்கும். அதற்கு பிறகு எலக்ட்ரிக் ரயிலாக மாறிவிடும். ரயில் ஈச்சம் தோட்டங்களுக்கு இடையே செல்லும். அப்பொழுது ரயில் குளிர்சாதனம் பொருந்தியதாக இல்லை. அதனால் மரங்களின் மணமும், மண்ணின் மணமும் கலந்து மனதிற்குள் அதன் நினைவுகளை எழுதிக் கொண்டே வரும்.
வரையப்படாத தீர்க்கரேகைகள்
உதிரிப்பாகம் - (அ)
படைப்புச் சிந்தனைகள் அல்லது திறவுகோள் சிந்தனைகளைப் பற்றி பேராசிரியர் கொடுத்த அசைன்மெண்டை முடித்தாகி விட்டது. ஆனால் எப்பொழுதும் அசைன்மெண்டில் வகுப்பில் சொல்லித்தராத நாம் அன்றாடம் பார்ப்பதிலிருந்தும் கேட்பதிலிருந்தும் தான் முன்னுதாரணங்களை எடுத்தாள வேண்டும். அது போல் அவர் போனில் சொல்லியதை மட்டுமே எழுத வேண்டுமென்றால் அது ஒரு அசைன்மெண்டாகாது. அதிலிருந்து என் படிப்பினைகளையும் பார்வைகளையும் முன்வைத்து எழுதுவதே ஆகும்.
தெரிந்தோ தெரியாமலோ முருகப் பெருமானை அந்த கட்டுரைகளில் குறிப்பிட்டேன். விநாயகர் சதூர்த்தி வேறு வந்தது நடுவில். அண்ணனுக்கும் தம்பிக்கும் இதுவரை தீர்த்து வைக்கப்படாத ஒரு வழக்கு வேறு உள்ளது. மாம்பழத்தை விநாயகர் பெற்றது சரியா தவறா என்ற விவாதங்கள் முன்பெல்லாம் நடக்கும்.
ஈசன் இருவருக்கும் கொடுத்த அசைன்மெண்ட் உலகத்தை சுற்றி வந்து பழத்தை பெற்றுக்கொள்ளுங்கள். ஆனால் என்னிடம் இருப்பது ஒரு மாம்பழம் தான் என்று சொல்லிவிட்டார். அன்றே அசைன்மெண்ட் காலம் தொடங்கிவிட்டது போல்.
இங்கு விநாயகர் எப்படி செயல்பட்டு பழத்தை பெற்றார் என்பது எல்லோருக்கும் தெரியும். அதை பின்பு பார்ப்போம்.
முருகப் பெருமான் ஈசன் சொன்னதை சொன்னவாறு செய்ய மயிலேறினார். அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை வேறு மாற்று யோசனைகள் இன்றி அவ்வாறே செய்தார். தீர்க்கமான ஒரு நேர்கோட்டு சிந்தனையில் செயல்பட்டு உலகைச் சுற்றி வந்தார். இதில் தவறேதும் இல்லை. குறையும் எவரும் கண்டுபிடிக்க முடியாது.
இதற்கிடையே விநாயர் என்ன செய்தார். உட்கார்ந்த இடத்திலேயே கொடுத்த அசைன்மெண்டை திரும்ப திரும்ப யோசித்தார். இதில் மற்றொரு முக்கியமான ஒன்று விநாயகர் தன் பெற்றோரை சுற்றி வந்து வணங்குவது தினமும் செய்யும் ஒன்றாகும். விநாயகர் மாம்பழத்து பிரச்சனை வந்த நாளன்று மட்டும் தான் ஈசனையும் பார்வதியையும் சுற்றினார் என்று நினைத்து விடாதீர்கள், அது எப்பொழுதும் வைத்திருந்த கடமை.
இங்கு விநாயகர் செய்தது திறவுகோள் சிந்தனையா இல்லை முருகர் செய்தது திறவுகோள் சிந்தனையா? ஏன்?
--- தொடரும்
கடையாணியார் சீ.நே.பி...
சும்மாதான்
சுற்றிக் கொண்டிருந்தேன்
கடலில்...
சும்மா தான
சுத்துறேன்னு
சும்மா சுத்து
என் வீட்டுக்
கண்ணாடித் தொட்டியிலும்
செயற்கையான பாறை
இடுக்குகள்
சாரல் இல்லாத நீரூற்றுகள்
பசுந்தரைகள்
கிளிஞ்சல்கள் இல்லாத
மணல் துகள்கள் இல்லாத
ஏதோ ஒரு
மாய உலகம்.
என் முன்னோர்
கனவிலும் கண்டிராத
உலகமிது.
நீர் மட்டுமே
இருக்கிறது என்பதற்காக
நீந்தச் சொல்லி
ஆக்ஸிஜன்
மட்டுமே உயிர்
மனிதா!
நீந்திவிடுவாயா!
இயந்திரகதியில்
கடையாணியார் சீ. நே. பி
ஏடேறும் எழுத்து - இளையராஜா
துகிலுறியும் நொடிகள் - (3)
வர வர வெள்ளிக்கிழமை ராமசாமி போல் ஆகிட்டேன். இப்போ இல்லண்ணே நீங்க ரொம்ப வருஷமா இப்படி தான் இருக்கீங்கன்னு விஜயா சொல்வது மனதிற்குள் கேட்கிறது. விஜயவாணி ரேடியோவிற்காக எழுதத் தொடங்கியது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நானே எழுதி நானே பேசி பாடலை அறிமுகம் செய்து விஜயா பாடிய பல பாடல்களை ஒலிபரப்பியது தான் முதல் அனுபவம்.
ஒரு இசை கலைஞன் தன் இசையின் மூலமாக உலகத்தை வெல்ல தொடர்ந்து முயன்று கொண்டிருக்கும் பொழுது அவனுக்குள் எப்படி தன்னைப் பற்றிய கேள்விகளும், அதற்கான பதில்களுக்காக ஓடினான் என்பதும் இசைஞானியின் இந்த புத்தகத்தைப் படிக்கும் பொழுது வியப்பாக இருக்கிறது.
பகவான் ஸ்ரீ ரமணமகரிஷி முதல் ஜே.கே வரை என தன்னுடைய ஆத்மார்த்தமான தனிப்பட்ட கேள்விகளுக்கு விடை தேடி பிரயத்தனம் செய்தது மட்டுமல்ல பிரயாணம் செய்து பல இடங்களுக்கு சென்றிருக்கிறார்
அலைதல் என்பது எத்தனை பேருக்கு பொருள்படும் செயலாக இருக்கும் என்று தெரியவில்லை. ஆசிரியர் திரு எஸ்.ரா அவர்களின் பல புத்தகங்களும் அவரின் பல பயணங்களையும் அவர் சந்தித்த மக்களின் மூலம் தான் கண்டடைந்த இயற்கையில் இருக்கும் அன்பின் கோட்பாட்டை விளக்குவது போல் இசைஞானியின் பயணங்களும் இருந்திருக்கிறது.
ஒரே கட்டுரையில் ஜே.கே'வை பற்றியும் அவர் பழமே காய்க்காத மரத்துடன் பேசினார் என்பதும், அம்மரம் மூன்று மாதம் கழித்து காய் காய்த்ததாகவும் எழுதியிருக்கிறார். இன்றைய உலக அதிகார கோமாளியின் போட்டியில், வெடிச்சத்தத்தின் எல்லை வரையறுக்கப்பட்ட நிலையில் எல்லையில்லா அன்பை ஏன் யாரும் தங்களுக்குரிய செயல் கருவியாக எடுப்பதில்லை என்றே தெரியவில்லை.
இசைஞானியின் கட்டுரைகளில் சில இடங்களின் அறிவியலின் ஆழத்தில் உழலும் சில கருத்துகளை போகிற போக்கில் சொல்லி செல்கிறார்.
"ஒரு நொடி இன்னொரு நொடியை இணைபிரியாது சேர்ந்து இருக்கிறதோ அப்படிதான் ஒலியும்."
காலம் என்பது என்ன, எதிர்காலமா, இறந்த காலமா, நிகழ்காலமா இல்லை நிகழ்கணமா. இக்கணம் மட்டுமே உண்மை மீதி அனைத்தும் சூன்யம் என்கிறது சில தத்துவங்கள். காலம் எண்பது நொடிகளின் கூட்டுத்தொகை எனில், அந்த பிரிக்கமுடியாத சங்கிலியும் ஒரு முடிவிலி தானோ. காலம் இல்லாத கருந்துளைகள் பற்றி பேசுகிறார்கள். ஆனால் காலத்தின் அந்த நுணிக்கிணறு வரை பயணிப்போர் யார்.
இதே போல் ஒலியை வைத்தே நல்லா இருக்கும் ஒருவனை பைத்தியக்காரனாக்க முடியும், அதே ஓலியை வைத்து மனம் பிறழ்ந்த ஒருவரை சகஜ நிலைக்கும் கொண்டு வர முடியும் என்பதையும் ஒரு கட்டுரையில் பேசியிருக்கிறார்.
இசையில் இருவிதங்கள் என்கிறார் இசைஞானி. உங்களின் மனதுக்குப் பிடித்தது ஒரு வகை. மற்றொன்று உங்களிடம் வந்து, நேராக உள்ளம் தொட்டு உட்கார்ந்து கொண்டுள்ள இஙை என்பது வேறு.
"கேள்வியின் அர்த்தம் ஒன்றாக இருக்கலாம்! ஆனால் பதிலோ, கேட்பவனின் தன்மையை வைத்துப் பலவாக மாறும். எல்லோருக்கும் ஒரு பதில் என்பது பொருந்தாது." - பகவான் ஸ்ரீரமணமகரிஷி.
கடையாணியார் சீ.நே.பி...
ஏடேறும் எழுத்து - இளையராஜா
தொடரும் பின்தொடர்தல் -(2)
ஒரு சில முக்கிய வரலாற்று காரியங்களை இயற்கை தனி மனிதனை வைத்து நிகழ்த்திக் கொள்கிறது. அப்படியே பலர் இவ்வரலாற்றில் இடம் பெற்றுள்ளார்கள்.
ஆம் இசைஞானி சொல்வது உண்மைதான். ஏழாம் வகுப்போ எட்டாம் வகுப்போ படித்துக் கொண்டிருக்கும் பொழுது என் பெரிய அண்ணன் நேரு ராஜாவின் ரமணமாலை கேசட்டை வாங்கி வந்தார். அப்பொழுது அவர் சேலத்தில் படித்து முடித்துவிட்டு ஓசூரில் வேலை செய்து கொண்டிருந்தார். எங்கள் வீட்டில் டெல்லி செட் என்று அப்பொழுது மிகவும் பிரபலமான உள்ளூர் தயாரிப்பு டேப்ரிக்கார்டர் இருந்தது.
சித்தர் பாடல்கள் பற்றியெல்லாம் அப்பொழுது எனக்கு தெரியாது. இப்பொழுது அங்கிங்கு கேட்டு தெரிந்து கொண்டதில் சித்தர்கள் பாடல்கள் எப்பொழுதும் அன்றாட மனிதனின் அலைச்சலையும் ஆசைகளையும் தொடர்ந்து சம்மட்டி கொண்டு அரைந்து தனி மனிதனுடன் மனதளவில் போராடிக் கொண்டேயிருக்கும். ஆனால் அப்பொழுது கேசட்டை போட்டு முதல் பாடலை கேட்கும் பொழுது "சுற்றுகிற உலகத்திலே பல விதத்தில் சுற்றுகிற மனிதர்களே, வெற்றுக் கைகள் உடன் பிறந்து பல விதத்தில் பற்றுக்களை பிடித்தவரே" என்று தொடங்கும். இது முதலில் கேட்கும் பொழுது ஏதோ ஜனரஞ்சகமான பாடல் போலவே தெரியும், ஆனால் தொடர்ந்து பலமுறை திரும்ப திரும்ப கேட்கும் பொழுது சில கேள்விக் குமிழிகளை நமக்குள் தோற்றுவிக்கும்.
அதற்கு முன்பு திருவண்ணாமலை என்று மட்டுமே அறிந்திருந்தேன். என் அப்பா நான் நான்காவது படிக்கும் பொழுது கார்த்திகை தீபத்திற்கு பந்தோபஸ் போய்விட்டு ஒரு மமஞ்சள் பை நிறைய விளையாட்டு சாமான்களை எனக்கு வாங்கி வந்தார். ஒரு பை நிறைய வெறும் விளையாட்டுப் பொருட்கள் என்பது பெரும் குவியல் போல. அதனாலேயே திருவண்ணாமலை எனக்கு தெரியும். அதுவும் இல்லாமல் நாங்கள் இருந்த அரூரில் இருந்து பார்த்தால் மலைமேல் எரியும் தீபம் தெரியும். ஆனால் அது தீர்த்தமலை தீபம். அதற்கு பின்பு திருவண்ணாமலையில் இருக்கும் சாமியின் பெயர் அருணாச்சலம் என்பதே இசைஞானியின் கேசட்டால் தான் தெரியும்.
இசைஞானியின் மூலமாக பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியின் பெயரும், கேசட்டில் இருந்த அவரது படமும் தெரியும்.
தீட்சண்யமான அந்த கண்களின் பார்வையிலிருந்து இன்று வரை என் மனதை விலக்கிக் கொள்ள முடியவில்லை. அந்த கண்கள் எப்பொழுதும் என்னுடன் பேசிக் கொண்டேயிருக்கிறது.
கடையாணியார் சீ.நே.பி...
இசைஞானியைப் பற்றி இன்றைக்கோ நிறைய கட்டுரைகள் எழுதப்படுகின்றன. அவரது இசையை நுண்ணறியும் நுணக்கம் தெரியாத பல மூடர் கூடங்கள் அவரது பேச்சினை விமர்சிக்கிறார்கள். தினமும் அவரின் பாடல்களை பற்றி வரும் குறுசெய்திகளை விட விமர்சனங்களே அதிகம் வருகிறது.
எப்பொழுதும் போல் எங்கு போவது எனத் தெரியாமல் நூலகத்தில் வாயிலில் பார்வைக்காக வைத்திருந்த புத்தகங்களை நுணிப்புல் மேய்ந்து கொண்டிருந்த போது இசைஞானியின் படம் போட்ட புத்தகம். இவரைப் பற்றி வேறு யாராவது எழுதியிருப்பார்கள் என்று நினைத்திருந்தேன். புத்தகத்தை கையில் எடுத்து மீட்டிய பொழுது தான் தெரிந்தது அது இசைஞானியின் அகக்கேள்விகளின் குறிப்புகள் என்று.
அத்தனை பரபரப்புகளுக்கும் இடையே தன் மனதில் தோன்றியதை அவ்வப்போது குறிப்பாக எழுதி வைத்து அதை ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்.
ஒரு எழுத்தாளனின் எழுத்துகளை புரிந்து கொள்ள நீ அவனை புரிந்து கொள்ள வேண்டும். அவனது எழுத்துகளின் வழியாக அவனை மிக அருகிலும் நெருங்க முடியும். வாசிப்பு ஒவ்வொரு வாசகனுக்கும் அவன் சார்ந்த, அவன் சேர்த்து வைத்திருக்கும் அனுபவங்களின் வழியாக ஏதாவது ஒரு புதிய பாடத்தையோ கதையையோ அவன் உள் மனதினில் சொல்லிக் கொண்டே இருக்கும்.
இசையும் அப்படி தான். ஆனால் இசையமைப்பாளரை புரிந்து கொள்ள இசையை ஆழமாக புரிந்து கொள்ளுமளவு அதில் ஞானமில்லை. அதனாலேயே இசையமைப்பாளனின் இசையை நேசிப்பர் அதில் ததும்பி குதிக்கும் பாடலின் வரிகளிலேயே நின்று போய் விடுகிறார்கள். இதனாலேயே வாசகன் எழுத்தாளனோட அடையும் நெருக்கத்தை இசையை ரசிக்கும் ஒருவனால் இசையமைப்பானோடு நெருங்க முடியாமல் போய்விடுகிறது. இதனால் புதுமணமான காதல் ஜோடிகளுக்குள் மனப்பிறழ்வு வருவதுபோல் இவர்களுக்குள்ளும் இடைவெளி ஆரம்பிக்கிறது.
இசைஞானி எழுதிய புத்தகத்தின் முதல் இரண்டு அத்தியாயங்களை வாசிப்பவருக்கு ஒரு பெரிய அதிர்ச்சியே கிடைக்கும். இத்தனை பெரிய இசைஞானி தனது முதல் அத்தியாயத்தில் தனது திறமைகளையும், தான் கையாண்ட இசை நுணுக்கங்களையும் பற்றி பேச ஆரம்பிப்பார் என்றே புத்தகத்தை தொடங்குவோம். ஆனால் ஏமாந்து போவீர்கள்.
முதல் அத்தியாயத்திலேயே இசை யாரல், எதன் பொருட்டு மீட்டப்படுகிறது. புல்லாங்குழலில் வரும் இசை யாருக்கு சொந்தம்? எட்டு துளைகளை தன் அகத்தில் வாங்கிய வெட்டுப்பட்ட அந்த மூங்கிலுக்கா, வெளிவரும் இசையை உலகத்தில் இருக்கும் அத்தனை ஜீவராசிகளுக்கும் எடுத்துச் சென்று பரப்புகிறதே அந்த காற்றுக்கா, உதட்டோடு உதடாக வைத்து உள்ளிழுத்த காற்றை வெளிப்போக்கின் பொழுது புல்லாங்குழலில் ஊதுகிறானே அவனுக்கா.
நாதத்தின் ஆதிகுருவான நாரதரின் இசை கர்வத்தை அடக்கும் கலைவாணியின் நாடகமாக எழுதியிருக்கிறார் இளையராஜா.
இப்பொழுது சில நாட்களாக ஊடகங்களில் வலம் இசைஞானியின் குறுஞ்செய்திகளையும் இந்த கதையையும் படித்த பின் தெரிந்து கொண்டேன். கர்வமும் பொறாமையும் இந்த உலகில் யாருக்கு என்று.
இத்தனை சாதனைகளை செய்த ஒருவர் தன் புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் அகந்தையை பொசுக்கும் கதையை எழுதுவதும் அந்த துணிச்சலும் அகந்தை அழிந்திருந்தாலொழிய நடக்காது.
ஒரு நாளில் நாம் அகந்தை இல்லாமல் இருந்த நொடிகள் எத்தனை முறை?
நாமா? அகந்தையில்லாமலா?
கடையாணியார் சீ.நே.பி...
















.jpeg)


